சமுதாய தலைவர்கள் - மதுரை திரு.M.R.A.K.சாமி. M.A.,
திரு.M.R.A.K.சாமி.M.A., அவர்கள் 18.12.1972-இல் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மேலமுடிமன்னார்கோட்டை கிராமத்தில் திரு.அப்பையா – திருமதி.சுப்பம்மாள்(இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்)தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தனது பட்டயப்படிப்பை Dip.Agri பரமக்குடியில் முடித்தவர், பின்னர் முதுகலைப் பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.புஷ்பலதா.M.Sc.,B.Ed என்ற மனைவியும், K.கோபிகா மற்றும் K.ஷெனிகா என்ற மகளும் உள்ளனர்.
தனது பட்டயப்படிப்பை முடித்தவர் மதுரையில் உள்ள புகழ்பெற்ற தனியார் நிறுவனமொன்றில் மேற்பார்வையாளராக உயர்ந்தவர் தற்பொழுது கோட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். திரு.சாமி அவர்களின் தந்தையார் திரு.அப்பையா அவர்கள் கிராம முன்சீப்பாக பணியாற்றியவர், ஆதலால் அப்பகுதியிலுள்ள மதிப்புமிக்க குடும்பங்களில் திரு.சாமி அவர்களின் குடும்பமும் ஒன்று. மதிப்புமிக்க குடும்பமாக நாம் குறிப்பிடுவது வெறும் அதிகாரத்தாலோ அல்லது பொருளாதார பின்புலத்தாலோ வந்ததன்று. கிராம முன்சீப்பாக அவராற்றிய தொண்டால் பெற்ற மதிப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுக்குழாய்கள் வருவதற்கு முன்புவரை கிராம மக்களுக்கு குடிநீர், ஏழை-எளிய குழந்தைகளுக்கு இலவசமாக பால், சுக-துக்கங்கள் என எதுவாகிலும் முதலில் மக்கள் தட்டும் கதவு திரு.சாமி அவர்களின் குடும்பக்கதவாகத்தான் இருக்கும். தங்கள் முன்னோர்களின் வழியைப்பின்பற்றி திரு.சாமி அவர்களும் அவரது உடன் பிறந்தோரும் தங்கள் பொறுப்புணர்ந்து இன்றுவரை கிராமத்தின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மே.முடிமன்னார்கோட்டையிலுள்ள முனுசாமி கோவில் பொங்கல் விழாவில் சிறு அசம்பாவிதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதை உடனடியாக தீர்த்துவைக்கும் வகையில் பொங்கல் விழாவிற்குண்டான அரிசியை தங்கள் குடும்பமே வருடம் தோறும் இலவசமாக வழங்கும் என்று ஊர்மக்கள் சபையில் அறிவித்து அதை 1993-94 முதல் இன்றைய தேதிவரை குறைவின்றி செய்து கொண்டுவருகிறது திரு.சாமி அவர்களின் குடும்பம். அந்த நேரத்தில் உடனடியாக தீர்வு காணப்படாமல் போயிருந்தால் பொங்கல் விழாவும் தொடர்ந்து நடைபெற்றிருக்காது, ஊர் மக்களின் ஒற்றுமையும் சீர்குலைந்து, பலகிராமங்களில் சிறுசிறு கௌரவப்பிரச்சினைகளால் கோவில்கள் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதைப்போல் இங்கும் நடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரலாற்றுப்பிழை/கறை ஏற்படாமல் தடுத்ததில் திரு.சாமி அவர்களின் பங்கு அதிகம்.
இதுமட்டுமில்லாமல் தங்கள் முன்னோர்காட்டிய வழியில் கிராமத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் சாதி, மத வேறுபாடின்றி ஒன்றிணைத்து கோவில் திருவிழாக்களையும், சுக-துக்கங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை வளர்த்துள்ளனர். மே.முடிமன்னார்கோட்டை கிராம வழக்கப்படி, உருவ வடிவம் ஏதுமின்றி, வழி வழியாக பட்டத்தரசியம்மை கிராமத்தினர் அனைவரும் ஒன்றுகூடி வழிபட்டு வரும் நடைமுறையை, காலமாற்றத்திற்கேற்ப வருங்கால சந்ததியினரும் இதைத் தொடர்ந்திடும் வண்ணம், அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்புடன் பட்டத்தரசி அம்மனுக்கு நிரந்தரக் கோவில் அமைத்து, சிறப்பான முறையில் 2003-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர் திரு.சாமி அவர்கள். எந்த ஒரு அமைப்பனாலும்,சங்கமானாலும், ஊர்பொதுநிர்வாகமானாலும் பிரச்சினையைத் தோற்றுவிக்கும் மையமாக இருப்பது வெளிப்படைத்தன்மையின்மை. ஆனால் திரு.சாமி அவர்கள் முன்னின்று நடத்தும் கிராம விழாக்கள் அனைத்தும் முடிந்தவுடன், உடனடியாக வேலைக்கு கிளம்பி சென்றுவிடாமல்,விடுமுறை எடுத்துக்கொண்டாவது இருந்து, கணக்கு வழக்குகளை கிராம பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டே கிராமத்திலிருந்து வெளியேறுவார் திரு.சாமி அவர்கள். இப்படி மக்களின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றவர், ஆதலால் அடுத்த ஒருசில ஆண்டுகளுக்குள் 34-ஆண்டுகாலமாக கும்பாபிஷேகம் நடத்தாமல் கைவிடப்பட்டிருந்த சந்தனமாரியம்மன் கோவிலை மக்களின் ஆதரவுடன், சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிகப்பட்டு, 2006-ஆண்டில் வெற்றிகரமாக திருக்குடமுழுக்குவிழா நடைபெற்றது.
இப்பணிகளையெல்லாம் ஏதோ பெருமைக்காகவும், புகழுக்காகவும் செய்பவரல்ல திரு.சாமி அவர்கள். தன் கிராமம் தாண்டி , தான் பணியாற்றும் இடத்தில் பணிநிமித்தமாக சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்கின்றவர், அப்பகுதியிலுள்ள ஏழை-எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இது மாணவ-மாணவியருக்கு வங்கியில் கல்விக்கடன் பெறுவதற்கு உதவி வருகிறார். அதேபோல் விவசாயிகளுக்கு பயிர்கடன், சொட்டுநீர் பாசானத்திற்கு கடன், நில அபிவிருத்திக்காண கடன், உரமானியம் என விவசாயிகளுக்கு என்னென்ன வகையில் சலுகைகள் உள்ளதோ அதை அனைத்தையும் பெற்றுக்கொடுத்து வருகிறார் திரு.சாமி அவர்கள். பல்கலைக்கழகங்கள் நடத்தும் கல்வி விழாக்களில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதுடன், அரசுப்பள்ளிகளில் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மாணவர்கள் படிக்கும் பொழுதே வேலைவாய்ப்பில் ஈடுபடுவது எப்படி, என்னென்ன வேலைகளில் ஈடுபட முடியும் என்பது பற்றி விளக்கமளித்து வருகிறார். மதுரை வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று விவசாயிகளுக்கு வழிகாட்டுவதுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் விடையளித்து வருகிறார் திரு.சாமி என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப்பணிக்கு சற்றும் குறைவில்லாமல் சமுதாயப்பணியிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் திரு.சாமி அவர்கள். வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்பவர். மதுரையிலுள்ள மாவீரன் சிலைக்கு வேன்களிலும்,கார்களிலும் ஆட்களைத்திரட்டி பெரும் படையுடன் ஊர்வலமாகச்சென்று, மாலை அணிவித்து மரியாதை செய்துவருகிறார். அதேபோல் வருடம்தோறும் பாஞ்சாலங்குறிச்சி சித்திரை திருவிழாவிற்கு படை பரிவாரங்களுடன் ஜோதி ஏந்தி சென்று கலந்து கொள்கின்றார். இதுதவிர தன் கிராமத்தில் நடக்கும் அனைத்து சுக-துக்கங்களிலும் சாதி,மத வேறுபாடின்றி கலந்துகொண்டு ஒரு முற்போக்குவாதியாக வலம்வருகிறார் திரு.சாமி அவர்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னரும் ஒரு பெண் உள்ளார் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மதுரையில் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் துணைமுதல்வராக பணியாற்றும் திருமதி.புஷ்பலதா அவர்கள், கடுமையான பணிகளுக்கு மத்தியிலும், திரு.சாமி அவர்களின் பொதுநலன் சார்ந்த விஷயங்கள் அனைத்திற்கும் சிறந்த ஆலோசகராகவும், உற்றதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருப்பதால் மட்டுமே திரு.சாமி அவர்கள் அனைத்து துறைகளிலும் சேவையாற்ற முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எந்த விசயமானாலும் தன் நினைப்பதைதாண்டி தனது தாய் மாமனும், M.B.S. வங்கியின் முன்னாள் பொதுமேலாளருமான திரு.N.முத்துராஜா M.Com.,B.L.,(Chart.Accountant), அத்தை Dr.தனலட்சுமி மற்றும் தனது அண்ணியாரும், கல்வியாளருமான திருமதி.சுதா சிவக்குமார்.M.Sc.,B.Ed., போன்ற அறிவுஜீவிகளின் ஆலோசனைகளையும் கேட்கத் தவறுவதில்லை.
அரசியலில் மிகுந்த ஆர்வமுடையவர், பணியின் காரணமாக கலந்துகொள்வதை தவிர்த்து வந்தாலும்கூட, தன் மனதில் ஏற்றுக்கொண்ட கொள்கையின் அடிப்படையில் செயலாற்றி வருகிறார் திரு.சாமி அவர்கள். பணி நிமித்தமாக மதுரையில் குடும்பத்துடன் வசித்துவரும் நிலையிலும், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 72-வயதான தன் தாயார் திருமதி.சுப்பம்மாள் அவர்களை மேலமுடி மன்னார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார் திரு.சாமி அவர்கள். ஏற்கனவே பல்வேறு சேவைகளை சாதி.மதம், இனம்,மொழி கடந்து பணியாற்றி வரும் திரு.சாமி அவர்கள், தற்பொழுது கிடைத்துள்ள புதிய அதிகாரத்தின் மூலம் அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி, சிறந்த முன்மாதிரி ஊராட்சியாக மாற்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டு சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.