இளம் சிங்கங்கள் - கோவை.திரு.சிவக்குமார் மயில்சாமி
திரு.M.சிவக்குமார், அவர்கள் 1974 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் ஈச்சனாரியில் திரு.மயில்சாமி – திருமதி.மயிலாத்தாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.சுமதி என்ற மனைவியும்,S.விஜய்.B.E., என்ற மகனும் உள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் திரு.சிவக்குமார் அவர்கள், சமுதாயத்தின் மீது தீராப்பற்றுள்ளவர். விடுதலைக்களம் அமைப்பின் கோவை மாவட்ட செயலாளராகப் பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் திரு.சிவக்குமார் அவர்கள், கோவை மாவட்டத்தின் குக்கிராமங்கள் தோறும் அமைப்பைக்கொண்டு சேர்த்து, கிளைகளை உறுவாக்கியதில் முக்கியப் பங்கு வகிப்பவர். ஈச்சனாரி.திரு.க.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து விடுதலைக்களம் அமைப்பிற்கு கோவை மாவட்டத்தில் வலுவான அடித்தளத்தை உறுவாக்கியதுடன், ஆர்வமுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு சமுதாயப் பணியில் ஈடுபட தூண்டுகோலாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், அஇஅதிமுகவில் பொள்ளாச்சி கிழக்கு ஒன்றியப் பொருளாளராகவுள்ள திரு.கே.டி.மோகன்ராஜ், நல்லட்டிபாளையம் ஊராட்சிமன்றத் தலைவராக பொறுப்பு வகித்துவரும் திருமதி.கார்த்திகா அவர்களின் கணவரும், கோவை மாவட்ட திமுக மாணவரணி துணைஅமைப்பாளரான தாமரை.திரு. குமரேசன் போன்றோர்களின் ஆரம்பகட்ட அரசியலில் உடனிருந்து ஊக்குவித்தவர். அவர்களுடன் இணைந்து விடுதலைக்களம் அமைப்பிற்காக பொள்ளாச்சியில் மாநாட்டையும் நடத்தியுள்ளார். தவிர மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை கோவை மாவட்டம் ஈச்சனாரியில் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்துச் செயல்பட்டு வெற்றிகண்டவர் திரு.சிவக்குமார் அவர்கள்.
சமுதாயம் சார்ந்த கூட்டங்கள் தமிழகத்தின் எந்த மூலையில், எந்த அமைப்பின் சார்பில் நடந்தாலும் பாரபட்சமில்லாமல் கலந்து கொள்ளவது, அமைப்புகளைக் காட்டிலும், இனத்தின் மீது இவர் வைத்துள்ள பற்றை பறைசாற்றும். அதேபோல் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், தொட்டிய நாயக்கர் குடும்பங்களில் நடக்கும் அனைத்து சுக-துக்க நிகழ்விலும் பாகுபாடின்றி கலந்து கொள்ளும் பண்பாளர். சமுதாயம் சார்ந்த செய்திகளை குக்கிராமங்கள் வரை உடனுக்குடன், துரிதமாக கொண்டு சேர்க்கும் அளவிற்கு அனைத்து பகுதியிலும் இன உறவுகளுடன் நெருங்கிய தொடர்புகளை பெற்றுள்ளதால், அப்பகுதி மக்களால் “புயல்குமார்” என்று அன்புடனும், செல்லமாகவும் அழைக்கப்படுகிறார்.
வருடம்தோறும் சென்னை.வீ.க.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் நடத்தும் கூட்டங்களுக்கு. கோவை மாவட்டத்திலிருந்து பெருமளவில் இளைஞர்களை அழைத்துவந்து கலந்து கொள்பவர், இச்சங்கத்தின் தூதுவராக, சங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் உடனுக்குடன், கோவை மாவட்டத்தின் குக்கிராமம் வரை கொண்டு சென்று சங்கத்திற்கு புகழ் சேர்த்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுநேர சமுதாயப்பணியில் தன்னலம் கருதாது தன்னை அர்ப்பணித்து பணியாற்றி வரும் திரு.சிவக்குமார் அவர்கள், பூரண உடல்நலத்துடன், மென்மேலும் சமூகப்பணியாற்றி, வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை மீட்டெடுக்கும் பணியில் தொடர அன்புடன் வாழ்த்துகிறோம்.