இளஞ்சூரியன்கள் – சென்னை.திரு.செந்தில் அப்பையன்
திரு.செந்தில் அப்பையன்.B.Tech., அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகேயுள்ள ஜமீன் கோடாங்கிபட்டியைச் சேர்ந்த தெய்வத்திரு.இராம அமிர்த பெத்து மற்றும் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டிச் சேர்ந்த திருமதி மஞ்சம்மாள் ஆகியோருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். இவருக்கு உடன்பிறந்த சகோதர் மற்றும் சகோதரி இருக்கிறார்கள். இவருக்கு திருமணமாகி திருமதி.அனுராதா என்ற மனைவியும் மகள்கள் அக்ஷரா, அம்ரிதா என்ற இரட்டையர்கள் உள்ளனர்.
திரு.செந்தில் அப்பையன் அவர்களின் தந்தையார் தெய்வத்திரு. இராம அமிர்த பெத்து அவர்கள் சென்னை, இந்தியன் வங்கியில் அலுவலராக சுமார் 26 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தந்தையாரின் வழிகாட்டுதலில், குடும்பத்தலைவியான தாயாரின் நேரடிப்பார்வையிலும், அரவணைப்பிலும் வளர்ந்தவர்கள் இந்த சகோதர, சகோதரிகள். குழந்தைகள் அனைவரும் சென்னையில் பிறந்தவர்கள் என்றபோதிலும் மேட்டுக்குடித்தனமான போலி வாழ்க்கைக்கு ஆட்படுத்தாமல், நமது சமுதாய வாழ்க்கையையொட்டி, நடுத்தரக்குடும்பம் சந்திக்கும் ஏற்ற – இரக்கங்கள், சுக-துக்கங்களை எதிர்கொள்ளும் வகையிலும், சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ்வதற்கு கல்வி என்ற ஒன்றைத் தவிர மாற்று ஒன்று கிடையாது என்ற புரிதலைக் குழந்தைகு ஊட்டி வளர்த்தனர் பெற்றோர்கள். இதனால் கல்வியின் முக்கியத்துவத்தை மூவரும் அறிந்திருந்தனர். இது பின்னாட்களில் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு உதவப்போகிறது என்பதை பெற்றோர்களும்,குழந்தைகளும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
நடுத்தரக்குடும்ப வாழ்வியலைக் கொண்டு வளர்ந்திருந்தாலும், சாதி, அதன் உட்பிரிவுகள், சமுதாய மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய எந்தச்சுவடுகளும் இவர்களின் 25 ஆண்டுகால வாழ்க்கையில் அறிந்தவர்கள் அல்ல. மூன்று குழந்தைகளும் பெற்றோர்களுக்கு நல்ல பிள்ளைகளாக, பாரே போற்றும் வண்ணம் மெத்தப் படித்து பெருமை சேர்த்தனர். அந்தவகையில் திரு. செந்தில் அப்பையனின் மூத்த சகோதரி திருமதி.அனுராதா அவர்கள் வேதியல் துறையில் M.Phil பட்டம் பெற்றவர் என்பதைத்தாண்டி, சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியல் பிரிவில் தங்கம் வென்ற “தங்க மங்கை” என்பது குறிப்பிடத்தக்கது. இளைய சகோதரர் திரு. சகாதேவன் அவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று “ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட்” எனும் பன்னாட்டு வங்கியில் பணியாற்றி வருகிறார். படிப்பில் இவர்களுக்கு சற்றும் சளைத்தவரல்ல திரு .செந்தில் அப்பையன் அவர்கள், இவரும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக இரசாயன/வேதிப் (Chemical Engineering) பொறியியல் துறையில் (B.Tech) இளநிலைப் பட்டம் பெற்றவர், பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக வாழ்க்கையில் வெறும் ஏட்டறிவை மட்டுமே வளர்த்துக் கொண்டவரல்ல திரு.செந்தில் அப்பையன் அவர்கள். தென்னாட்டு பெர்னாட்ஷா அன்று அழைக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கிய கல்லூரி அல்லவா! அடித்தட்டு மக்கள் மீதான சுரண்டலை அகிலமெல்லாம் கொண்டு சென்றவரல்லவா? அதுவரை சாதியின் வாடையின்றி நகர வாழ்க்கையில் வளர்ந்தவர், தன் பிறப்பின் அடைப்படையில் தான் கல்லூரியில் இடம் பெற்றதை உணர்ந்தார். தனக்குப்பின்னால் ஒருசாதிய அடையாளம் இருப்பதையும், அது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியாக (MBC) இருப்பதையும் தெரிந்துகொண்டார். அப்போதைக்கு மாணவராக கல்லூரியில் நுழைந்திருந்த நிலையில், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தியவர், அதை மனதில் ஒரு ஓரத்தில் நிறுத்திக்கொண்டார். அதற்குமேல் சிந்திக்க வங்கியில் வாங்கியிருந்த கடன் வாய்ப்பு வழங்கவில்லை. ஆனாலும் திரு.செந்தில் அப்பையன் புறச்சூழலையும், சக மனிதன் வாழ்வியலையும் உள்வாங்கியபடியே படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரி இறுதியாண்டு இன்னும் சிலபடிப்பிணைகளைத் தந்தது. கல்லூரி வாழ்வில் கடைசிப் பருவத்தில் INDUSTRIAL TRAINING என்பது மிக முக்கியமான ஒன்று. இதில் சகமாணவர்களின் செல்வாக்கை பறைசாற்றும் விதமாக இருக்கும். அவரவர் தங்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் பொருளாதார அல்லது சமுதாய செல்வாக்கிற்கேற்ப நகரத்திற்கு மிக அருகிலுள்ள ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நுழைந்து விடும் போக்கும், அது ஏதுமற்றவர்கள் பயிற்சிக்கு செல்லமுடியாமல் அள்ளாடுவதும் வருடம்தோறும் நிகழ்வதுண்டு. அப்படிப்பட்ட அனுபவம் தனக்கும் வாய்த்தபொழுது, ஏற்கனவே நான்காண்டுகளுக்கு முன் மனதின் ஓரத்தில் வைத்திருந்த நினைவுகள் முட்டித்தள்ளியது. அப்பொழுதுதான் தன் சமுதாயத்தில் அப்படியெல்லாம் ஆகப்பெரும் தொழிலதிபர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்துகொண்டார்.
தனது கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் “கேம்பஸ் தேர்வில்” தேர்வானவர், உடனடியாக பணியில் அமர்ந்து விடாலும், தனது சமுதாயம் பற்றிய உறுத்தல் இல்லாமல் இல்லை. அந்த நினவுகளுடன் தன் வாழ்க்கையையும் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியகட்டாயத்தில் இருந்தவர், சரியான வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருந்தார். சமுதாயத்தினர் சென்னைக்கு மிகத்தொலைவில் இருப்பதால் அவர்களின் நேரடிதொடர்புகளை உடனடியாக ஏற்படுத்திக்கொள்ள முடியாவிட்டாலும், சென்னையில் பிழைப்புத்தேடி வந்து நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மூலமாக தன் சமுதாயம் பற்றிய தேடுதலைத் தொடங்கினார்.
இப்படியான சூழலில் நீண்டநாட்களாக நகர்ந்து கொண்டிருந்தவரின் தேடுதல் தன் சொந்த திருமணத்தின் மூலம் நிறைவேறியது திரு.செந்தில் அப்பையன் அவர்களுக்கு. பெருநகர வாழ்க்கைக்கு பழகியவருக்கு தெற்குச்சீமை கிராமத்துப்பெண் மணப்பெண்ணாக அமைந்ததின் மூலம், அடிக்கடி சென்று வரும் வாய்ப்பு இயல்பிலேயே அமைந்ததால் தன் வேர்களைத் தேடும் பணி முடிவுக்கு வந்தாலும், அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இல்லை. தன்னுடைய ராஜகம்பள சமுதாயத்தில் பலருக்கு தரமான கல்வி என்பதே எட்டாக்கனியாக இருப்பதும், கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் சமுதாய பெரியோர்களுக்கு இல்லாமல் இருப்பதையும் நிஜத்தில் பார்த்தார். அக்கிராம நடுத்தர குடும்பத்தின் வருமானம் என்பது நகர்ப்புற நடுத்தரக் குடும்ப வருமானத்தில் 10-இல் 1 பங்குக்கும் கீழாக இருப்பதைக் கண்கூடாக பார்த்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவரல்லவா, அதனால் அவர்களின் வருமானத்தை மட்டும் பார்க்கவில்லை, அவர்களின் வாழ்வியலையும் பார்த்தார். அவர்களின் பழக்க வழக்கங்கள் கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், சம்பிரதாயங்கள் என அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டார். அதற்கு ஏற்றாற்போல் திட்டங்களை வகுத்து, தன்னுடைய சமுதாயப்பணியை தொடங்க ஆலோசித்திக் கொண்டிருந்தவருக்கு, இயற்கை ஒரு சகவயதுள்ள சக சமுதாய இளைஞனை அறிமுகம் செய்து வைத்தது.
அந்த இளைஞன் உண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்திருக்க வேண்டியவன், கிராமத்து சூழலில் பயின்று +2 தேர்வில் 89% மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் ரூபாய் 500 கொடுத்து விண்ணப்பப் படிவம் வாங்கமுடியாத குடும்ப பொருளாதாரத்தாலும், வழிகாட்டி உதவியிருக்க வேண்டிய சமுதாயக் குருடர்களாலும், சென்னை பலசரக்குக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருப்பது திரு.செந்தில் அப்பையன் நெஞ்சில் முள்ளாய்த் தெய்த்தது. முடிந்து போனது விதியாகவே இருக்கட்டும் என்று முடிவுக்கு வந்தவர், விதிகளை மாற்றும் விதிகளைக் கண்டறியத் துணிந்தார். ஆம் தன் சமுதாய சேவைக்கான விதிகளை வகுத்துக்கொண்டார். இரண்டடி திருக்குறளைப்போல் இரண்டு யோசனைகளை முன்வைத்து செயல்படத்தீர்மானித்தார். அதன்படி இனி இந்த இராஜகம்பள சமுதாயத்தில் இப்படியொரு திறமைமிக்க இளைஞர்களை வெறும் பொருளாதாரத்தடையால் சமுதாயம் இழந்துவிடக்கூடாது என்பது, மற்றொன்று, சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடுகள் என்று கட்டுண்டு கிடக்கும் பிற்போக்குவாதிகளிடம் விவாதம் செய்து காலவிரயம் செய்யப்போவதில்லை என்ற இரு தீர்க்கமான முடிவுகளுடன் சமுதாயப்பணியில் அடியெடுத்து வைத்தார்.
தன்னுடைய 15 ஆண்டுகால பணி அனுபவம், திரு.செந்தில் அப்பையன் அவர்களுக்கு மற்ற சமுதாயத்தினரின் வாழ்வியலும், பழக்க வழக்கங்களும் மற்றொரு பாடத்தையும் கற்றுக்கொடுத்தது. அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி, நம் சமுதாயத்தில் பெரிய அளவிலான ஏற்றத்தாழ்வுகளையும், முரண்பாடுகளையும் களையவதின் மூலமே சமுதாயம் வளர்ச்சியைக் காணமுடியும் என்று நம்பினார். அந்த வகையில் பிறசமுதாயத்தினர், அவரவர் பணிபுரியும் இடங்களானாலும், தொழில் செய்யும் இடங்களானாலும், கிடைக்கும் வாய்ப்புகளை தங்கள் சமுதாயத்தினருக்கே கிடைக்கச்செய்வதற்கு கடும் சிரத்தையெடுக்கின்றனர். இதற்கு நேர்மாறான மனநிலையில் கம்பளத்தார்கள் இருப்பதைத் தாண்டி, தன் இனத்தானை உயர்த்திவிட வேண்டும் என்ற எண்ணமற்றவர்களாக படித்தவர் முதல் பாமரன் வரை நினைப்பது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதை சமுதாயத்தில் காண்கிறார். நமது சமுதாய மக்களிடம் எங்கும், எவரிடத்திலும் நீக்கமற நிறந்திருக்கும் இந்த இழிகுணம் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் களையப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்.
தனது எண்ணங்களுக்கும், திட்டங்களுக்கும் வண்ணம் தீட்டி செயல்பட தீர்மானித்தவர், ஒத்த கருத்தும், ஒரே சிந்தனையும் கொண்டவர்களை ஒருங்கிணைத்து செயலில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதில் முதற்கட்டமாக, இராஜகம்பள மக்களை அடையாள படுத்தும் வகையில் “RAJAKAMBALA ELITE EDUCATIONAL TRUST-இராஜகம்பள மேன்மக்கள் கல்வி அறக்கட்டளை” (REG NO: 173/2018) என்ற பெயரில் ஒரு முறையான அறக்கட்டளையை 2018 பதிவு செய்து தங்களது பணியைத் துவக்கியுள்ளனர்.
அறக்கட்டளை ஏற்படுத்திய இந்த குறுகிய காலத்திற்குள் இரண்டு ஆண்டுகளில் சுமார் 50 ஏழை-எளிய மாணவ மாணவிகளுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகையாக வழங்கியுள்ளனர்.நமது இன மக்கள் பணிபுரியும் அலுவலங்கள் , கட்டுமான துறை, பொறியியல் நிறுவனங்கள் , உற்பத்தித்துறை , மென்பொருள் துறை என பல துறைகளில் உள்ளவர்கள் மூலம் சுமார் நாற்பது மேற்பட்ட இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தந்துள்ளார்கள். மேலும், அரசாங்க போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் குழு அமைத்தும் , பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சி வினாக்கள் மூலம் உதவியும் வருகின்றனர்.
சென்னையிலிருந்து மட்டுமே தங்கள் சேவையைத் தொடராமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட வாரியாக, நமது மக்கள் வாழும் கிராமங்களை தேடி சென்று , சமுதாயத்திலுள்ள பல்துறை அறிஞர்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் , சமுதாய பயணிக்க வேண்டிய பாதை பற்றியும் சிந்தனை விதைகளை தூவிக் கொண்டு வருகிறார்கள். இது போன்ற கூட்டங்கள் , தேனி மாவட்டத்தில் உள்ள அவாடிபட்டியிலும் , திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிப்பட்டியிலும் , தூத்துக்குடி மாவட்டம் ஜமீன் கோடாங்கிபட்டியிலும், கரூர் மாவட்டத்தில் கம்பிளி நாயக்கனூர் கிராமத்திலும் கடந்த ஒன்றரை வருடங்களில் நடத்தி முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற உதவிகள் மிக நீண்டகாலத்தேவை என்பதை உணர்ந்துள்ளவர்கள் , அதற்கான நிதி ஆதாரத்தை திரட்டும் பொருட்டு, முறையான வங்கி கணக்கு துவங்கி, நன்கொடையாளர்களிடம் இருந்து பெறும் நிதியை வங்கி கணக்கில் மட்டுமே பெற்று வருகிறார்கள். நமது ராஜகம்பள மக்களுக்கு என பிரத்யோகமாக ஒரு கல்விக் கூடம் கட்ட வேண்டும் என்பது தான் இந்த அறக்கட்டளையின் எதிர்கால லட்சியக்கொண்டு செயல்பட்டு வருவதுடன், அதற்கு தேவையான நிதி மற்றும் ஆவண பணிகளையும் மெல்ல மெல்ல செய்து வருகிறது.
மேலும்,அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்ன என்ன என்பதை அவ்வப்போது FACEBOOK மற்றும் WHATSAPP செயலி மூலம் தமிழகம் முழுதும் உள்ள சமுதாய மக்களுக்கு தெரிவித்து ஆதரவை திரட்டி வருகிறது. புள்ளியில் தகவலாக நமது இனத்தில் இதுவரை எத்துனை மக்கள் அரசாங்க பணியிலும், ராணுவத்திலும் , காவல்துறையிலும் , பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாகவும் உள்ளனர் என்ற தகவலையும் திரட்டுவதுடன், அதை நமது இன மக்களுக்கு தெரியப்படுத்தி, கம்பளத்தார் என்று ஒருவர் எங்கு இருந்தாலும் அவர்மூலம் இந்த சமுதாயத்திற்கு என்ன நற்செயல்கள் செய்ய முடியும் என்பதை பரிசோதனை செய்வதையும் சமுதாய சேவைப்பணியில் ஒரு வழக்கமாகவும் வைத்து இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதைத்தாண்டியும் தன்னால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்யத்துடிக்கும் திரு.செந்தில் அப்பையன் அவர்கள் , அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றிய தகவல் மற்றும் உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ளும் வகையில் தன்னுடைய தொலைபேசி எண் : 9962010410 மற்றும் appaian84 @yahoo .co .in என்ற மு மின்னஞ்சல் முகவரியையும் சமுதாயத்தினர் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றார்.
திரு.செந்தில் அப்பையன் வாழ்க்கையிலிருந்து சமுதாயத்திற்கு ஏராளமான செய்தி கொட்டிக்கிடக்கிறதை காண்கிறோம். இதை சமுதாயத்துடன் ஒன்றிவாழ்பவர்கள் எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடியும். அதில் முதலாவதாக நாம் பார்ப்பது “வாழ்வியல் எதார்த்தம்”. முற்றிலும் மிகபின்தங்கிய கிராமப்புரத்திலிருந்து பெருநகரத்தில் குடியேறிய குடும்பம், நகர்ப்புறத்திலேயே பிறந்து வளர்ந்த குழந்தைகள் சிறப்பாக படித்தார்கள் என்பதைத்தாண்டி, குடும்ப்பண்பாட்டையும் பேணிக்காத்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமைசேர்த்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இன்று கிராமப்புறத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவைப்பதில் காட்டும் அக்கரையை, வழிநடத்துவதில் காட்டுவதில்லை என்ற எதார்த்ததை உணரவேண்டும். இதனால் பெண்குழந்தைகளை தாரை வார்க்கும் பெற்றோர்கள் அவமானம் தாங்கள் துடிப்பதையும், சமூகம் பரிகாசிப்பதையும், சமுதாயமும் புலம்புவதும், அதிகம் காண்கிறோம். மற்றொன்று நகர்புறத்தில் வாழும் பெற்றோர்கள் கிராமப்புற இளைஞர்களுக்கு பெண்ணைத் திருமணம் செய்துவைக்கத் தயங்குவது. அவர்களுக்கெல்லாம் திரு.இராம அமிர்த பெத்து தம்பதியினர் வழிகாட்டியாக உள்ளனர் என்று சொன்னால் மிகையல்ல. சென்னை பல்கலைக் கழகத்தில் தங்க பட்டயம் வென்ற முதுகலைப் பட்டதாரி தங்க மகள்.அனுராதாவை, சென்னையிலிருந்து 500 கிமீ அப்பாலுள்ள ஒரு கிராமத்தில் இளங்கலைப்பட்டதாரி என்றபோதிலும் குணத்திலும், பண்பிலும் உயர்ந்தவரான துரு.சேதுராமனுக்கு மணம்முடித்துள்ளது சமகாலம் வரை நடைபெறாத ஒன்றாக உள்ளது. அந்தவகையில் பெற்றோரின் விருப்பத்தை மதித்து, தன்னால் எங்கும் வாழமுடியும் என நிரூபித்து செயல்பட்ட திருமதி.அனுராத சேதுராமன் போற்றுதலுக்குறியவர்.
மற்றொரு முக்கியமான விசயத்தையும் சமுதாயம் கவனித்தாக வேண்டும். அதாவது, படித்து பட்டம் பெற்று வேலையில் இருப்பவர்கள்,மேல்தட்டு மக்கள், நர்புறத்திற்கு குடிபெயர்ந்தவர்களுக்கு, சமுதாய ஈடுபாடு முற்றிலுமாக அறுந்து போவதைக் காணமுடிகிறது. சமுதாயத்தின் மீதான அவர்களின் பார்வையே, தங்களுக்கு குழந்தைகளுக்கு திருமணம் செய்ய வேண்டி வரும் சூழலில் தற்காலிகமாக வந்து செல்வதை இன்று கண்கூடாக பார்த்து வருகிறோம். படித்த மாப்பிள்ளை, அரசாங்க மாப்பிள்ளை, நல்லவேலையில் இருக்கின்ற மாப்பிளை என வகைவகையாக கோரிக்கை வைப்பவர்கள், அவர்களை உருவாக்க ஒரு சிறுதுறும்பைக்கூட கிள்ளிப்போட்டவர்களல்ல என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும். இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில், நகர்ப்புறத்தில் பிறந்து, வளர்ந்து, அண்ணா பலகலைக்கழகத்தில் பட்டம் பெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுறியும் இளைஞன் தன் சமுதாய நிலைகண்டு, அவர்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கத் துணிகிறார் என்றால் அவரை என்ன சொல்லிப்போற்றுவது. சுயநலவாதிகள் தங்கள் அந்திமக்காலத்திற்குள்ளாகவே அஸ்தமணிதுப்போவதும், திரு,செந்தில் அப்பையன் போன்றவர்களில் புகழ் காலம்கடந்து நிலைத்து நிற்பதும் இந்த தன்னலமற்ற பரந்த மனப்பான்மையால் தானோ? இந்தப் பெருமை, புகழ் அனைத்தையும் திரு.செந்தில் அப்பையன் பெற்றோர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றது சமுதாயம்.
தோண்டத் தோண்ட அற்புதங்களாலும், அதிசியங்களாலும் நிறைந்துள்ளது திரு.செந்தில் அப்பையன் வாழ்க்கை. ஆம், மெத்தப்படித்த இந்த சகோதர சகோதரிகள் கூட்டுக்குடும்பமாக வாழ்கின்றார்கள். இது இன்று கிராமத்தில் கூட செத்துப்போன பழக்கமன்றோ! சென்னை போன்ற பெருநகரத்தில் பிறந்து வழந்தவர்களுக்கு எப்படி சாத்தியமானது இந்த வாழ்க்கை. எத்தனை பாடங்களும், படிப்பினைகளையும் இந்த சமுதாயத்திற்கு கொடுக்கிறது இந்த சாதாரண ஒற்றைக் குடும்பம். எதைப்பாராட்டுவது? யாரைப்பாராட்டுவது? பெற்றோர்களையா? பிள்ளைகளையா? மருமகள்களையா? மருமகனையா? குடும்பம் ஒரு கோயில் என்பதற்கு இதைவிட என்ன பெருமை வேண்டும். திரு.செந்தில் அப்பையன் அவர்களே, நீங்கள் வளர வளர சமுதாயம் வளரும்… நீங்கள் வாழ வாழ சமுதாயம் வாழும்… என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உங்களுடன் சமகாலத்தில் பயணிப்பதில் பெருமை கொள்கிறோம். நீங்கள் நீடூடி வாழ சக்கதேவி அருள்புரிவாளாக.