“மங்கையரில் மகராசி”- சமூகசேவகி -ஆழ்வார்குறிச்சி. திருமதி.கௌரி சுரேஷ்
சமூக சேவகி.திருமதி. கௌரி சுரேஷ் அவர்கள் 1977-ல் கோவை மாவட்டம், புகழ்பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ள ஈச்சனாரியில் திரு. ACC மணி (எ) சுப்பிரமணியம் – திருமதி.சக்குபாய் தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் திரு. சுரேஷ் அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதியினருக்கு S.நேஹா மற்றும் S.மேஹா என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமதி.கௌரி அவர்கள் கோவையில் தனது பள்ளி மற்றும் M.C.A., பட்ட மேற்படிப்பை முடித்தவர், பின் M.B.A., படிப்பை சென்னையில் முடித்தார்.
அப்பாவுடன் பிறந்த ஒரே ஒரு அத்தை அல்லது ஒரே ஒரு சித்தப்பா, இல்லை அம்மாவுடன் பிறந்த ஒரே ஒரு தாய்மாமன் அல்லது சித்தி, இது தான் இன்று ஒவ்வொருவரின் குடும்ப வட்டம். அதிலும் ஆயிரம் முரண்பாடுகள், நவக்கிரக வாழ்க்கை. குழந்தைகளுக்கு உறவுகளை சொல்லி வளர்க்காத பெற்றோர். ஆனால் திருமதி.கௌரி அவர்களின் தந்தையார் திரு.சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடன் பிறந்த இரண்டு சகோதரர்கள் தவிர, தன் சித்தப்பாவின் ஏழு பெண்களையும் உடன் பிறந்த சகோதரிகளாக ஏற்றுக்கொண்ட வகையில் ஏழு அத்தைகள் என மிகப்பெரிய குடும்பப் பின்னனியிலிருந்து வந்தவர் திருமதி.கௌரி சுரேஷ் அவர்கள். அப்பாவின் தனிக்குடித்தன வாழ்க்கை, கான்வென்ட் படிப்பு, நகர சூழல் என மேட்டுக்குடி வாழ்க்கை முறையானாலும், அனைவரையும் அரவணைத்துச்செல்லும் பாங்கையும், சக உறவுகளிடம் அன்பு பாராட்டுதலையும், எவ்விதத்திலும் அது திருமதி.கௌரி சுரேஷ் அவர்களை பாதிக்கவில்லை. ஒரு சின்ன விஷேசமென்றாலும் வீட்டில் கூடிடும் உறவுகளின் கூட்டம், திருவிழாக்கூட்டத்திற்கு சற்றும் குறைந்ததல்ல. தங்களின் மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும் ஒன்றுகூடியே பகிர்ந்துகொண்ட அற்புத உறவுகளைப் பெற்றவர் திருமதி.கௌரி சுரேஷ் அவர்கள்.
இந்தக் குடும்பப் பின்னணியுடன், குடும்பம் கற்றுக்கொடுத்த படிப்பினையும்,கல்லூரி படிப்பையும் முடித்துக்கொண்டு, சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக தன் வாழ்க்கையைத் துவங்குகிறார் திருமதி.கௌரி சுரேஷ் அவர்கள். அங்கு சக ஆசிரியப் பெண்மணிகள் போல் கல்லூரிக்கு சென்றோமா, வகுப்பிற்கு சென்று பாடமெடுத்தோமா என்பதோடு தன் கடமையை முடித்துக்கொள்ளவில்லை. கல்லூரியில் உள்ள நாட்டு நலப்பணி திட்டம் (NSS) இயக்கதினருடன் இணைந்து சமூகநலப்பணிகளில் ஈடுபட்டார். அதன் மூலம் பல ரத்த தான முகாம்களை நடத்தியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் ஏழை-எளிய மக்களுக்கு வழங்கிவந்தார். மெத்தப்படித்தவர், கல்லூரி விரிவுரையாளர், சமூக நலப்பணிகளில் அதீத ஆர்வம் என எல்லாம் தான் விரும்பியபடியே அமைத்துக்கொண்டவர், எளிய மனிதர்களின் நாடிபிடித்தவர், தன் பெற்றோரின் நாடி பிடிக்காமலா இருந்திருப்பார்? பெற்றோர்கள் மகளை திருமணம் செய்துகொள் என்ற பொழுது, அது உங்கள் விருப்பப்படியே என்றார். மகளின் இந்த ஒற்றைச்சொல்லில் தானே பெற்றவர்களின் உயிரே அடங்கியுள்ளது என்பது நிகழ்கால வாழ்வியல் எதார்த்தம். அடுத்தவர்களுக்காக அழும் அப்பழுக்கற்ற மனம் கொண்டவர்களின் வாழ்வை ஆண்டவன் பார்த்துக்கொள்வான் தானே.
அடுத்த ஊருக்கே அவ்வளவு தூரத்துக்கு எங்கபோய் கொடுக்கிறது?.. என நொந்து கொள்ளும் பெற்றோர்களைக் கொண்ட சமுதாயத்தில் 400 கிமீ அப்பாலுள்ள அம்பாசமுத்திர மாப்பிள்ளை, அதுவும் வெளிநாட்டு குடியுறிமை பெற்று சர்வதேச நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் என்று கவலை கொண்டவர்களல்ல பெற்றோர்கள். எந்த நிபந்தனையுமின்றி துணிந்து முடிவெடுத்த பெற்றோர்கள், அவர்களின் முடிவுக்கு துணை நின்றார் அன்பு மகள் திருமதி.கௌரி. எதிர்கால கனவுகள் ஏதுமின்றி கணவரின் கரம்பற்றி, கடல் கடந்து சென்றார். சிங்கப்பூர். சீனா, மலேசியா, கட்டார் என பத்தாண்டு வாழ்க்கைக்குள் வலம் வந்த நாடுகள் பல. நாடுகள் பல சென்றாலும் இளம் வயதிலேயே பொறுப்புடன் வளர்ந்தவருக்கு இந்தப் பயணங்களை தனக்கான வாழ்வியல் அனுபவங்களாக எடுத்துக்கொண்டார். சொந்த நாட்டின் மக்களின் சோகங்களை உள்வாங்கியவருக்கு, மற்ற நாட்டு மக்களின் வாழ்வியலை உற்று நோக்கும் வாய்ப்பாக அதை பயன்படுத்திக்கொண்டார். இதெல்லாம் ஒருபுறம் நடந்துவந்தாலும், உதவும் மனம் கொண்ட உள்ளங்கள், அதைச் செய்ய செய்ய தங்களை உயிர்ப்பித்துக் கொண்டேயிருப்பதாக உணர்வார்கள். இவருக்கும் நெஞ்சோரம் அது இல்லாமல் இல்லை. சரியான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார்.
காலம் நீண்ட நாள் கௌரி அவர்களை ஏங்கவிடவில்லை. அவரது தோழி மூலம் அந்த வாய்ப்பைப்பெற்றார். அவரது கல்லூரித்தோழி ஒருவர், தமிழ்நாட்டில் That’s my child என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வந்தார். ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தவர், பள்ளியில் படிக்கும் ஏழை ஏளிய குழந்தைகளையும் அதுவும் என் குழந்தைகளே “That’s my Child” என்றார். எங்கிருந்து வந்தது இந்த உயர்ந்த உள்ளம்?அந்த விதையை திருமதி.கௌரி அவர்களின் தந்தையார் விதைத்திருந்தார். ஆம் அண்ணனில்லாத தன் சித்தப்பாவின் பெண்கள் எழுவருக்கும் நானே அண்ணன் என்று ஏற்றுக்கொண்டு இன்றுவரை எழுவரின் குடும்பத்திற்கும் தாய்மாமனாக சகல சடங்கு-சம்பிரதாய, சீர்முறைகளையும் சலைக்காமல் செய்பவரல்லவா? விதையொன்று போட்டால் செடியொன்றா முளைக்கும்?. வெளிநாட்டிலிருந்தபடியே தன்தோழியுடன் இணைந்து பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி பயில பல்வேறு உதவிகளை செய்யத் துவங்கினார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 2500 குழந்தைகளையும் தாண்டி பயனாளிகளின் பட்டியல் நீண்டு சென்றுகொண்டே இருக்கிறது. இவர்களின் சேவையால் குறிப்பாக கோவை, திருவண்ணாமலை, தேவகோட்டை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் உதவியுடன் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிக அதிகமாக பயன்பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், நிதி உதவி, ஆகியவற்றோடு இவர்களின் பணிமுடிவடைந்துவிடவில்லை, ஏட்டறிவு தவிர மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் அறிவியல் ஆய்வு பயிற்சி, கணினி பயிற்சி ஆகியவற்றை தானே நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகளை பயிற்றுவிக்கின்றார். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு A.P.J.அப்துல் கலாம் அவர்கள் வழியை பின்பற்றி, குழந்தைகள் தான் சமுதாயத்தின் எதிர் காலம் என செயலாற்றி வருகிறார்.
பெற்றோரின் மனமறிந்து நடந்தவர், ஏழைக்குழந்தைகளின் நலன் அறிந்து நடப்பவர், கணவரின் ஆசையை நிறைவேற்றாமல் போவாரா? திருமதி.கௌரி அவர்களுக்கு ஒருகனவு இருந்ததுபோல் கணவர் திரு.சுரேஷ் அவர்களுக்கும் ஒரு ஆசை இருந்தது. அந்நிய மண்ணில் ஆண்டுகள் பலவானாலும் சொந்த மண்ணில் இயற்கை விவசாயம் செய்யவேண்டும் என்ற ஆசை அவருக்கு நீண்டநாள் கனவான இருந்தது. அவரின் ஆசையை நிறைவேற்றிட அம்பாசமுத்திரம் திரும்பியவர், ஆழ்வார்குறிச்சியில் சொந்தமாக நிலம்வாங்கி, அங்கேயே வீடு கட்டி, இயற்கை விவசாயத்தையும் வெற்றிகரமாக செய்து வருகிறார். தற்பொழுது That’s My child என்ற அமைப்பின் இணைநிறுவனராக பொறுப்பு வகித்து வருகிறார். நமது சமுதாயத்திலும் நன்றாகப் படிக்கும், தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு உதவிட தயாராகவுள்ளார். தேவைப்படுவோர் இவரை That’s My Child முகநூல் வழியாகவோ, http://www.thatsmychild.in என்ற இணையதள முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் ஆண்மக்களே கால்பதிக்கத் தயங்கும் துறையில், தன்னார்வ முயற்சியால் தடம்பதித்து, இன்று 2500க்கும் அதிகமானவர்களுக்கு சேவையாற்றியுள்ளனர் என்றால், வியப்பாக உள்ளது. இவருடைய அயராத சமூக சேவை நிச்சயம் நமது சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. நமது அரசியல் பிரபலங்களும், சமுதாய மக்களும் இவரின் சேவையை பயன்படுத்தி மக்களை முன்னேறச் செய்ய முன்வரவேண்டும் என்று வேண்டி, திரு.கௌரி சுரேஷ் அவர்களின் சேவை தொடர அன்புடன் வாழ்த்துகிறோம்..