🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயப்பணியில் பொன்விழா கண்ட நாயகர் - மதுரை - திரு.M.மாரையா

திரு.M.மாரையா அவர்கள் 15.06.1949-ல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் திரு.அ.மாரையா நாயக்கர்- திருமதி.முத்தம்மாள் தம்பதியினருக்கு ஏழை விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் ஆரம்பக்கல்வியை வேடநத்தம் தொடக்கப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை  ம.ரெட்டியப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர், புகுமுக வகுப்பை (P.U.C) மதுரையிலுள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் முடித்தார். மேற்கொண்டு கல்லூரி படிப்பைத் தொடர குடும்ப பொருளாதாரம் இடம்கொடுக்காத சூழலில், விருதுநகர் அருகேயுள்ள ஜோகில்பட்டி ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். திரு.மாரையா அவர்களுக்கு திருமதி.M.சீனியம்மாள் என்ற மனைவியும் M.செந்தில்குமார் என்ற மகனும் M.அனிதாபாரதி என்ற மகளும் உள்ளனர். 


சமீபத்தில் தன் 71-வது பிறந்தநாளை பூர்த்தி செய்து, சமுதாயசேவையில் பொன்விழா கடந்து பயணித்துவரும் திரு.மாரையா அவர்கள், தனது இளமைக்கால நிகழ்வுகளையும், அரசியல், சமுதாய – பொதுவாழ்வு பணிகளையும் சுயசரிதையாக, தொட்டிய நாயக்கர் இணையதளம் மூலம் வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் பொருட்டு, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.எஸ்.இராமராஜூ அவர்களின் மூலமாக நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

மாணவப்பருவத்திலிருந்தே தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டவராக இருந்த திரு.மாரையா அவர்கள், இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சுக்கும், அவரின் கொஞ்சுதமிழுக்கும் மிகப்பெரிய ரசிகனாக இருந்ததாக சொல்லுபவர், இதுவே தான் இடைநிலை ஆசிரியப்பயிற்சி முடித்தவுடன், தி.மு.கழக மேடைகளில் பேச்சாளராக உரையாற்றக் காரணம் என தனது தொடக்ககால அரசியல் அறிமுகத்தை விவரிக்கின்றார். இதன் மூலம் திமுக-வின் முன்னனி தலைவர்களாக இருந்த திரு.தங்கப்பாண்டியன், திரு.க.காளிமுத்து, திரு.காதர்பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி, மாங்குடி. திரு.மதியழகன் போன்றோர்களுடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பையும், நட்பையும் விளக்கினார்.


1976-இல் அரசுப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றத் துவங்கியவர், தலைமை ஆசிரியருடன் இணைந்து, அன்றைய கல்வி அமைச்சராக இருந்த திரு.செ.அரங்கநாயகம், சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் திரு.க.காளிமுத்து ஆகியோர்களை அழைத்துவந்து இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளதை மறக்கமுடியாத அனுபவமாக நினைவு கூறுகின்றார் திரு.மாரையா. இதற்கிடையே கல்லூரிப்படிப்பை தொடரமுடியாத கடந்தகாலத்தை எண்ணி, மனக்குறையுடனே நீண்டநாள் இருந்ததாகச் சொல்லுபவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடத்திய அஞ்சல்வழிக்கல்வியில் இணைந்து, வரலாற்றுத்துறையில் முதுகலைப்பட்டம், அரசியல் அறிவியல்துறையில் முதுகலைப்பட்டம், தமிழ்துறையில் முதுகலைப்பட்டம் என மூன்று முதுகலைப் பட்டங்களைப்பெற்றவர், அத்துடன் நிறைவு கொள்ளாமல், கல்வியியலில் முதுகலைப்பட்டம். இதழியல் மற்றும் தகவல்துறையில் முதுகலைப்பட்டயம் பெற்றதோடு, மதுரை சட்டக் கல்லூரியில் மாலைநேர வகுப்பில் இணைந்து வழக்கறிஞர் பட்டத்தையும் பெற்று மனநிறைவுற்றதாக, கற்றலில் தனக்கிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார் திரு.மாரையா.

இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், ஆசிரியர் சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்பவர், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் மன்றத்தில் பரமக்குடி வட்டச் செயலாளராகவும், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராகவும், மாநில அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1985-இல் ஜாக்டி அமைப்பு நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு வந்துள்ளதையும், போராட்ட காலத்தில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் ஒருமாத காலம் சிறைவாச அனுபவத்தையும் பதிவு செய்கிறார். மேலும்,  தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்று, இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளதை சுட்டிக்காட்டும் திரு.மாரையா அவர்கள், பதவி உயர்வு பெற்ற தமிழாசிரியர் கழகத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தவிர, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் பரமக்குடி மாலை நேரக்கல்லூரியில், வரலாற்றுத்துறை பேராசிரியராக மூன்றாண்டுகாலம் பணியாற்றியதை தன்வாழ்நாள் சாதனையாக பெருமிதம் கொள்கிறார். அதன்பின் பள்ளித்துணை ஆய்வாளராக பணிமாற்றம் செய்யப்பட்டு, இராமநாதபுரம், விருதுநகர், ஆகிய மாவட்டக்கல்வி அலுவலகங்களில் பணியாற்றிய திரு.மாரையா அவர்கள், 2007-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பணியாற்றியபொழுது ஓய்வு பெற்றுள்ளார்.


மாணவப்பருவம் முதலே சமுதாயப்பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாகக் குறிப்பிடும் திரு.மாரையா அவர்கள், 1970-இல் திரு.பி.ராஜு, கத்தாளம்பட்டி திரு.வரதராஜன் திரு.சுப்பையா, மறவன்குளம் நாட்டாமை திரு.பி.சுப்பிரமணியன், திரு.எ.அழகர்சாமி, திரு.தங்கப்பாண்டியன் ஆகிய நண்பர்களுடன் இணைந்து, "திருச்சுழி வட்டார இராஜகம்பள வாலிபர் சங்கம்" துவங்கியதே, தன் இளமைக்கால சமுதாயப்பணிக்கு அச்சாரமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார். 1950-இல் துவங்கப்பட்ட இராஜகம்பள மகாஜனசங்கம், 1973-இல் திரு.வையப்ப நாயக்கர் அவர்கள் தலைமையில் விருதுநகரில் கூடி, மகாஜனசங்கத்தை மாநில அளவில் விரிவுபடுத்துவதென தீர்மானிக்கப்பட்டு, அதனடிப்படையில், மாகாஜனசங்க நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில், இளைஞர்களின் சார்பாக தான் இடம்பெற்றதாக, மகாஜன சங்கத்துடனான தனக்கு ஏற்பட்ட தொடர்பை விவரிக்கின்றார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் மாநிலம் முழுவதும் கிளைபரப்பிய மகாஜன சங்கம், நிறைவாக 1974-மார்ச் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில், இராஜகம்பளத்தார் வரலாற்றில் மறக்கவும், மறைக்கவும் முடியாத வகையில், மகாஜன சங்கத்தின் 2-ஆவது மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்ற வரலாற்றை நம் கண்முன் கொண்டு வருகிறார் திரு.மாரையா. (முதல் மாநாடு1952-இல் இராமநாதபுரம் மாவட்டம் பிள்ளையார்நத்ததில் நடந்ததாக தகவல்)


மதுரை தமுக்கம் மாநாட்டில் திரண்ட கம்பளத்தார் கூட்டமே, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, பாஞ்சை மண்ணில் மீண்டும் உருவாக காரணமாக இருந்தது என்று குறிப்பிடும் திரு.மாரையா அவர்கள், இக்காலகட்டத்தில், கோட்டை அமைய முக்கிய  காரணகர்த்தாவாக இருந்த திரு.க.சுப்பு அவர்களுக்கு தானும் உறுதுணையாக இருந்ததை எண்ணி மனநிறைவு கொள்கிறார். 1977-இல் மகாஜனசங்கத்தின் தலைவராக இருந்த திரு.வையப்ப நாயக்கர் அவர்களின் மறைவையடுத்து, அமைப்பின் செயல்பாட்டில் தொய்வும், அமைப்பில் சில முரண்களும் ஏற்பட்டதாகக் குறிப்பிடும் திரு.மாரையா, சமுதாயப்பணி தொய்வின்றி தொடரவும், அரசு பொறுப்பில் இருக்கும் சமுதாயத்தினரும் சமுதாயப்பணியாற்றிட ஏதுவாக, திரு.க.சுப்பு அவர்களின் ஆலோசனையின்பேரில், 1978-இல் மதுரை, திருப்பரங்குன்றம் தொட்டியர் மடத்தில், மகாஜன சங்கத்தின் தலைவராக (பொறுப்பு) இருந்த தும்மலப்பட்டி A.B.பெருமாள் நாயக்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டதையும், தொடங்க வேண்டியிருந்த அவசியத்தையும், தேவையையும் பதிவு செய்கிறார் திரு.மாரையா. அக்கூட்டத்தில் த.வீ.ப.கழகத்தின் மாநில அமைப்பாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, த.வீ.க.ப கழகத்துக்கும் தனக்குமான தொடர்பை நினைவு கூறுகின்றார். இதன் தொடர்ச்சியாக, 1983-ஆம் ஆண்டு த.வீ.ப.கழகம் முறைப்படி அரசில் பதிவு செய்யப்பட்டு, அதன் முதல் தலைவராக குடிப்பட்டி.திரு.S.K.முத்தையா அவர்களும், செயலாளராக திரு.N.நல்லையா அவர்களும், பொருளாளராக திரு.T.துரைப்பாண்டி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு முழுமையான அமைப்பாக செயல்படத் தொடங்கியதாக பண்பாட்டுக்கழக வரலாற்றை முன்வைக்கிறார். (அதுவரை மாநில அமைப்பாளர் பதவி மட்டுமே இருந்துள்ளது). ஒருசில ஆண்டுகள் இடைவெளிக்குப்பின், மாநில கொள்கைப்பரப்பு செயலாளராக பொறுப்பேற்று 2006-வரை செயல்பட்டதாகவும், அதன்பின் கருத்து வேற்றுமையால் வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.


சமுதாயப்பணியாற்றுவது நாடி, நரம்புகளில் இரத்தத்தோடு இரத்தமாக கலந்துவிட்டதாக சொல்பவர், அதைத்தொடர விரும்பி 2006-இல் "வீரபாண்டிய கட்டபொம்மன் கல்விக்கழகம்" என்ற அமைப்பை துவங்கி, அதன் நிறுவன தலைவராக பொறுப்புவகித்து வந்துள்ளார். அப்பொழுது வீரசக்கதேவி கோவிலுக்குள் போலீஸ் அத்துமீறி நுழைந்ததைக்கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஆலயக்குழுவுடன் இணைந்து கல்விக்கழகமும் போராட்டத்தில் ஈடுபட்டது. தமிழக அரசின் எட்டாம் வகுப்பு பாடத்தில், மாவீரனை கொச்சைப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டிருந்ததை, அப்போதைய கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதைப் பாடத்திலிருந்து நீக்க பாடுபட்டதை கல்விகழகத்தின் சாதனையாக நினைவு கூறுகின்றார். மேலும் திரு.க.சுப்பு அவர்களின் உதவியுடன் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு, வேலை வாய்ப்பு மற்றும் அரசு பணியிட மாறுதல்களைப் பெற்றுத்தந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், தலைவர்களுடனான நட்பை சுய லாபத்திற்கோ, குடும்பத்திற்கோ பயன்படுத்திக்கொண்டதில்லை என்கிறார்..

பொதுவுடமை இயக்கத்துடனான தனக்கு ஏற்பட்ட தொடர்பை பகிர்ந்துகொண்ட திரு.மாரையா அவர்கள், திரு.க.சுப்பு அவர்களின் தொடர்பே பொதுவுடமை சித்தாந்தத்தின்பால் தான் ஈர்க்கப்பட காரணமாக இருந்ததாகவும், அதனைத்தொடர்ந்து 1972-இல், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மதுரை மாவட்டத் துணைத்தலைவராகியுள்ளார். மேலும் இந்திய-சோவியத் நட்புறவுக்கழகத்தின் திருமங்கலம் வட்டச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளவர், ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை வட்டக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இதன் மூலம் பொதுவுடமை இயக்கத் தலைவர்களான தோழர்.M.கல்யாணசுந்தரம், தோழர்.நல்லக்கண்ணு, தோழர்.தா.பாண்டியன், தோழர்.மகேந்திரன், தோழர்.S.S.தியாகராஜன் தோழர்.ஞானையா ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிட்டியதாகக் குறிப்பிடுகிறார். தன் நீண்ட காலப்பொதுவாழ்வில் ஒரே ஒருமுறை தேர்தலைச் சந்தித்தவர், பணிஓய்விற்குப்பின் 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விருநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியுற்றதாக பதிவு செய்கிறார்.


அதன்பின் இயக்கப்பணிகளை குறைத்துக்கொண்டு, சமுதாயப்பணியில் முழு கவனம் செலுத்தியவர், மதுரை நீதிமன்றத்தில் வழக்குரைஞராகவும் பணியாற்றி வருகிறார். தனது எண்ணங்களையும், சிந்தனைகளையும், நாட்டு நடப்புகளையும், சமுதாய நிகழ்வுகளையும் மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்க “முதல் முழக்கம்” என்ற மாதாந்திர இதழைத் தொடங்கி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதைக் குறிப்பிடும் திரு.மாரையா அவர்கள், பணிச்சுமையாலும், நீடித்த நிதிபற்றாக்குறையாலும் தொடர்ந்து நடத்த முடியாததை வருத்தத்துடன் வெளிப்படுத்துகிறார். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நாடாண்ட கட்சிகளும், பார்போற்றிய தலைவர்களும் பத்திரிக்கை நடத்த முயன்று தோல்வியைச் சந்தித்த வரலாறுகளை பக்கம் பக்கமாகக் காணலாம். நிலைமை இவ்வாறிருக்க “முதல் முழக்கம்” முடங்கியதில் வியப்பேதுமில்லை என்று திரு.மாரையாவை ஆற்றுப்படுத்தியபின் தொடர்ந்தவர், சமுதாயத்திலுள்ள அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற நோக்கில், ஒருங்கிணைப்புக்குழு அமைக்க ஓராண்டுகாலம் பகீரதப் பிரயத்தனம் செய்து, அதற்காக ஆலோசனைக் கூட்டங்களை பல்வேறு இடங்களில் நடத்தியதைக் குறிப்பிட்டவர், கடைசியில் அம்முயற்சி படுதோல்வியில் முடிந்ததாக கனத்த இதயத்துடன் சொல்கிறார் திரு.மாரையா. அடுத்தகட்டமாக, மற்ற மூத்த தலைவர்களுடன் இணைந்து, தான் இளைமைக்காலத்தில் சமுதாயப்பணியில் ஈடுபட உந்துசக்தியாக இருந்த, தற்பொழுது செயல்பாடில்லாமல் முடங்கியுள்ள,  இராஜகம்பள மகாஜன சங்கத்திற்கு உயிரூட்டும் முயற்சியில் ஈடுபட்டு, அதிலும் வெற்றிபெற முடியாமல் போனதை வெளிப்படையாக பதிவு செய்கிறார்.


அடுத்தடுத்து தனது முயற்சிகள் தோல்வியடைந்தாலும், சமுதாயப்பணியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தவர், ஒத்த கருத்துடைய சமுதாயத் தலைவர்களுடன் இணைந்து, 2020-ஆம் ஆண்டு இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கம்  என்ற அமைப்பைத் துவங்கி, தான் நடத்தி வந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கல்விக்கழகத்தையும் இணைத்து, அந்த அமைப்பின் தலைவராக பதவியேற்று பணியாற்றி வருகிறார். சமுதாயத்திற்காக பல்வேறு தளங்களில் செயல்பட விருப்பத்தை வெளிப்படுத்தும் திரு.மாரையா அவர்கள், ஏற்கனவே பல்வேறு காலகட்டகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோதிலும், அதே சுறுசுறுப்புடன் தற்பொழுது சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு வயது தடையாக இருப்பதையும் உணர்ந்தேயுள்ளார். சமுதாயத்திலுள்ள மூன்று பிரிவு மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துபவர், அதற்கு தலைவர்களே தடையாக இருப்பதாக நினைக்கின்றார். கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த அன்றைய காலகட்டத்திலேயே திரு.க.சுப்பு அவர்களின் வழிகாட்டுதலில் “சில்லவார்” குல மங்கையை மணமுடித்து மாற்றத்திற்கு வித்திட்டதாக பெருமை பொங்க பேசுகின்றார். இந்தப்போக்கு சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் திரு.மாரையா, அப்படி நடக்காமல் போனதற்கு தலைமைப்பொறுப்பில் இருந்தவர்கள் அதை ஊக்குவிக்காததே காரணம் என்கிறார். தலைவர்கள் மட்டும் இணைந்து செயல்படுவதால் எந்தப்பிரயோசனமும் இல்லை என்பவர், அடித்தட்டு மக்கள் குடும்ப அளவில் உறவு கொள்ளாமல் மேடையளவில் ஒற்றுமைபேசி என்ன பயன் என்ற கேள்வியை முன்வைக்கின்றார். மேலும்,சமுதாயப்பணியாற்ற பெருமளவு இளைஞர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் திரு.மாரையா அவர்கள், 1990-க்குப்பின் சங்கங்களும் ,அமைப்புகளும் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும், வழிகாட்டவும் தவறிவிட்டதாக கருதுகின்றார். குழந்தைகளுக்கு வருங்காலம் மிகக் கடுமையானதாகவும், சவாலானதாகவும் இருக்கும் என்று கணிக்கும் திரு.மாரையா, இளைய சமுதாயத்தை நல்லமுறையில் வழிகாட்டிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து பெற்றோர்களிடமும், அமைப்புகளிடமும் முன்வைக்கின்றார்.

பொதுவாழ்வில் பொன்விழா கண்டு சமுதாயப்பணியை தொடர்ந்துவரும் திரு.மாரையா அவர்கள் அனுபவம் வாய்ந்த, சமுதாயத்தின் மூத்த தலைவராக இருந்து அனைவருக்கும் வழிகாட்டிட, நீண்ட ஆரோக்கியத்தையும், ஆயுளையும் பெற்று வாழ்வாங்கு வாழ இயற்கை அன்னை அருள்புரிய வேண்டுமாய் வேண்டுகிறோம். (திரு.மாரையா-கைப்பேசி எண்:9442028940)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved