🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மூன்றுமுறை கட்டப்பட்ட உலக அதிசயமே பாஞ்சைக்கோட்டை!- வரலாற்று அதிசயமே வணங்குகிறோம் உன் பிறந்தநாளில்!!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்  அவர்களுக்கு இன்று 98வது பிறந்தநாள்...

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு , வீரம் விளைந்த தெற்கு சீமையாம் , எங்கள் நெல்லை மாவட்டத்தில் , கோட்டைமேடு  பகுதியை பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு மகிழ்ந்து , கண்மணி க.சுப்புவின் கோரிக்கையை ஏற்று மாவீரன் வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு 6 ஏக்கரில் நினைவுக் கோட்டை எழுப்பி , 202 வீடுகள் கட்டி கட்டபொம்மன் சந்ததியினர் குடியிருப்பை எழுப்பி, 202 குடும்பத்திற்கும் தலா 3 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து , தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை என்ற புதிய துறையை ஏற்படுத்தி , இந்தியாவிலேயே முதன் முதலில் சுதந்திர போராட்ட வீரனுக்கு அரசு விழாவை நடத்தி கவுரவித்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இன்று 98வது பிறந்தநாள்.......


கால் நூற்றாண்டைக் கடந்து பொன்விழாவை நோக்கி பயணிக்கிறது பாஞ்சாலங்குறிச்சி நினைவுக் கோட்டை!

மடிந்து போன வீரர்களுக்கு நடுகல் நடுவதுதான் மரபு , ஆனால் கோலோச்சிய மன்னனுக்கு கோட்டை எழுப்பி வரலாற்றில் நிரந்தர இடத்தை நிலைநாட்டிய அதிசயத் தலைவரே , நீங்கள் 18-08-1974 ம் ஆண்டு பாரே வியக்கும் வண்ணம் , இந்தியப் பெருங்கடலே எழுந்து வந்தது போல் லட்சக்கணக்கான மனிதத் தலைகளுக்கு மத்தியில், பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் புடை சூழ , தங்கள் பொற்கரங்களால் நினைவுக் கோட்டையை திறந்து வைத்த காட்சியை நான் கண்ணால் காணவில்லை என்றாலும் , கற்பனையால் அதை நினைத்து மகிழ்ந்த நாட்கள் ஏராளம். உலகவரலாற்றில் அழிக்கப்பட்ட அடையாளங்கள் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது நீ கட்டிய பாஞ்சாலங்குறிச்சிகோட்டை என்பதில் தன் எத்தனை பெருமை. நீ கட்டியபின் தான் அதன் ஆயுளும் கூட அரைநூற்றாண்டு நோக்கி நகர்கிறது.


25-08-1974 ல் கழகக்குரல் ஏட்டில் ஆசிரியர் சிட்டிபாபு எம்.பி,. அவர்கள் எழுதியதை நான் கலைஞர் பிறந்தநாள் வாழ்த்தாக சமுதாய மக்களுக்கு மீண்டும் நினைவு விருந்து படைக்கிறேன்.

மாண்புமிகு கல்வி அமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் தலைமையேற்க , மாண்புமிகு பொதுப்பணிதுறை அமைச்சர் ப.உ.சண்முகம் , மாண்புமிகு. வேளாண்மைத் துறை அமைச்சர் சி.பா.ஆதித்தனார் , மாண்புமிகு மேலவை துணைத்தலைவர் ம.பொ.சிவஞானம் போன்றோர் முன்னிலை ஏற்று , திருவாளர்கள் மணலி கந்தசாமி எம்எல்ஏ , எம்.எஸ்.சிவசாமி எம்எல்ஏ , கா.மு.கதிரவன் எம்எல்ஏ , எம்.முத்தையா எம்எல்ஏ , க.சுப்பு எம்எல்ஏ , சென்னப்ப ரெட்டியார் ஆகியோர் கலந்து கொண்டு பங்கெடுக்க....


மங்கல இசையாம் நாதசுர இசையை முழக்கியபடியே முதலாவது அலங்கார ஊர்தி தவழ்ந்து வந்தது ; அதைத் தொடர்ந்து எத்தனை ஊர்திகள் ! அப்பப்பா..... அனைத்தும் பரணி பாடுவதற்கு உரியவை ! காவியமாய் வரைவதற்கு தகுந்தவை.

புறநானூற்றுக் காட்சி - அகநானூற்றுக் காட்சி - வணிகக் கொள்ளை அடிக்க வந்த வெள்ளையர்கள் கோலோச்சிய வரலாறு , வீரபாண்டியன் அரியணை காட்சி , இன்னும் இப்படி எத்தனை காட்சிகளை அலங்கார ஊர்திகள் சுமந்து சென்றன. 

உணர்ச்சியை அள்ளித் தூவிவரும் ஊர்திகளுக்கு நடு நடுவே,

உணர்ச்சிமிக்க வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றன! 

பல வண்ணக் கொற்றக் குடைகளை ஏந்திப் பலர் வந்தனர் !

கருப்பு - சிவப்பு ஆகிய இரு வண்ணக் கொடிகளை ஏந்தி அணிவகுத்து வந்தனர் தி.மு.கழகத் தோழர்கள் - தொண்டர்கள்.!

சீரூடை அணிந்து பேரணி வகுப்பு நடத்தினர் - தாய்மார்கள் !

தாய்மார்களைத் தொடர்ந்து 'உலா' வந்தனர் சேய்மார்கள்! - புதிய சமுதாயத்தின் பூங்கொத்துக்களான மாணவியர் !

பேரறிஞர் உருவாக்கிய சீரணியினர் , வீரநடை போட்டு வந்தனர்!

இதனைத் தேசிய திருவிழாவாக மாற்ற வேண்டும் என்பது போல் , தேசிய மாணவர் படை அணி திரண்டு வந்தது.!

இடை இடையே கோலாட்டமும் , மயிலாட்டமும் , காண்போரின் கண்களை - கருத்தை - உணர்வைக் கவர தவறவில்லை. !

தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் , வீரபாண்டியன் கோட்டையைத் திறந்தார்கள். !

கல்லும் கவிபாடும் என்பது போல் , கதவும் வரலாறு கூறும் என்று சொல்லலாம். !

அப்பப்பா ! கதவுகளில் தான் எத்தனை வரலாற்று நிகழ்ச்சிகள் வடித்தெடுக்கப் பட்டுள்ளன. !


கோட்டையின் உள்ளே 7 அடி சிலை அரியனையில் அமர்ந்திருப்பது போல் உள்ளது , ஊமைத்துரை , பாதர் வெள்ளையத்தேவன் , தானாபதிப் பிள்ளை , ஆகியோரின் உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.அந்த நாள் மன்னர்களுக்கு அமைக்கப் பெற்ற மெய்க்கீர்த்தியைப் போல் , கோட்டையை உருவாக்கித் தந்த கலைஞருக்குப் புகழ் மகுடம் சூட்டுவதற்காக மெய்க்கீர்த்தி ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது.!

புதைந்த புகழை வெளிக் கொணர்ந்தார் என்று தொடங்கும் அந்த மெய்கீர்த்தி , கலைஞரின் சாதனையை எடுத்துக் கூறுகிறது, அதனைப் படிக்கின்ற போது பண்டைக்கால கல்வெட்டுக்களைப் படிக்கின்ற உணர்வே ஏற்படுகிறது. இப்படி வரலாற்றின் பக்கங்களில் நிரந்தர இடம் பிடித்த அன்புத் தலைவா நீவீர் பிறந்தநாளே தமிழர்கள் தன்மானம் பெற்ற நாள்.

எங்களின் கோட்டையே! எங்களின் முகவரியே!

உமது புகழ் என்றும் குன்றாது

வாழ்வாங்கு வாழும் இவ்வையகத்தில்.

ஹேப்பி பர்த்டே தலைவா...

நன்றி.

பாஞ்சைபோர்முழக்கம்.ப.செந்தில்குமார்.

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன் டிரஸ்ட்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved