ஊராட்சி மன்றத் தலைவர்-சிவகாசி-திருமதி.இந்திரா ஜெயமுருகன்.
திருமதி.இந்திரா ஜெயமுருகன் அவர்கள் 09.12.1969ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள V.சொக்கலிங்கபுரம் கிராமத்தில் திரு.துரைராஜ் - திருமதி. பஞ்சவர்ணம் தம்பதினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளவர், உள்ளூரைச் சேர்ந்த திரு.S.ஜெயமுருகன் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.S.ஜெயமுருகன் அவர்கள் 28.05.1969-இல் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே V. சொக்கலிங்க புரத்தில் திரு.செல்வராஜ்-திருமதி.பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பின் விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறார். திரு.ஜெயமுருகன்-திருமதி.இந்திரா தம்பதியினருக்கு J.பிரவின்குமார், J.நிதின்குமார் என்ற இரு மகன்களும், J.சுபாநந்தினி என்ற மகளும் உள்ளனர்.
திரு.ஜெயமுருகன் அவர்களின் தந்தையார் திரு.செல்வராஜ் அவர்கள் V.சொக்கலிங்கபுரம் கிராமத்தின் முன்சீப் ஆக பணியாற்றியவர். இதனால் அவ்வூரிலுள்ள அனைத்து தரப்பு மக்களிடத்திலும் நல்ல அறிமுகமும் தொடர்பும் திரு.ஜெயமுருகன் அவர்களுக்கு இயல்பிலேயே இருந்துள்ளது. தவிர கிராமத்தின் கோவில் விஷேசங்கள், திருவிழாக்கள், பொதுநிகழ்ச்சிகள் அனைத்திலும் திரு.ஜெயமுருகன் குடும்பத்தின் பங்களிப்பு முக்கிய இடத்தை வகிக்கும். அதே பாரம்பரியத்தில் திரு.ஜெயமுருகன் அவர்களும் பொது வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டு, மக்களின் அனைத்து சு-துக்கங்களிலும் பங்கெடுத்து வருகிறார்.
பொதுவாழ்வில் தொடர்ந்தாலும் எந்த அரசியல் கட்சியும் சாராமல் தனித்துவமாக இயங்கி வருபவர், 2006-ஆம் ஆண்டு முதல் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பொதுவாக ஊர்மக்கள் கூடி பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வழக்கத்தை 1996-உள்ளாட்சித் தேர்தல் முதல் கடைப்பிடித்து வரும் நிலையில், அடுத்து நடைபெற்ற 2001 ஆம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் அதே நடைமுறை தொடர்ந்தது. 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், முந்தைய தேர்தலின்பொழுது சபைக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்ட நிலையில் , தேர்தலை எதிர்கொண்டவர் விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் திரு.ஜெயமுருகன்.
சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த பொழுதிலும் தன் சேவைகளை தொடர்ந்தவர், மக்களுக்கும், கிராமத்திற்கும் தன்னாலான பணிகளை செய்துவந்தார். மீண்டும் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சுயோட்சையாக களம் கண்டவர் மிகப்பெரிய வெற்றி பெற்று சொக்கலிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பொறுப்பேற்றார். ஊராட்சி மன்றத் தலைவராக தெருவிளக்குகள், சிமெண்ட் காங்கிரீட் சாலைகள், சாக்கடை வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியதுடன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி மக்களின் துயர்தீர்த்தார். இதுதவிர கழிப்பிடங்கள், இரண்டு அங்கன்வாடி மையங்கள், கலையரங்கம் அமைத்து ஊராட்சியை மேம்படுத்தி மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றார் திரு.ஜெயமுருகன் அவர்கள்.
2016-ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தல் தள்ளிப்போன பொழுதும், ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து மக்களுக்கு செய்யவேண்டிய பணியை சாதாரண மக்கள் சேவகனாக தொடர்ந்து பணியாற்றி வந்தார் திரு,ஜெயமுருகன். இவரின் அப்பழுக்கற்ற சேவையை போற்றும் வகையில் கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சொக்கலிங்கபுரம் ஊராட்சி மன்றத்தலைவராக திருமதி.இந்திரா ஜெயமுருகன் அவர்களை போட்டியின்றி ஒருமனுதாக தேர்ந்தெடுத்தனர் ஊராட்சிக்குட்பட்ட மக்கள். அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் திருமதி.இந்திரா ஜெயமுருகன் தம்பதியினர் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.