ஊராட்சி மன்றத் தலைவர் - நிலக்கோட்டை-திரு. M.செல்வராஜ்
திரு.M.செல்வராஜ் அவர்கள் 05.10.1979-ல் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சீத்தாபுரத்தில் திரு.முத்துசாமி-திருமதி.பொன்னம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் பிறந்தார். பள்ளியிறுதி வரை படித்தவர், பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.சிந்தாமணி என்ற மனைவியும், S.சௌமியா என்ற மகள் மற்றும் S.சிவதாஸ் என்ற மகனுடன், S.சர்மிளா, S.சஞ்சய்ராஜ் என்ற இரட்டையர்கள் என நான்கு செல்வங்கள் உள்ளனர்.
விவசாயம் தவிர சுயதொழிலில் அதிக நாட்டமுடையவர், நிலக்கோட்டை நகரில் மலர்கள் கொள்முதல் செய்து மொத்த விற்பனை செய்யும் மண்டியும், விவசாய உரங்கள் விற்பனையகமும், சிறப்பாக நடத்தி வருகிறார். தன் இளமைக்காலத்திலேயே சமுதாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர், த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தின் நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார். திரு.செல்வராஜ் அவர்களின் வேகமான செயல்பாடு காரணமாக, நிலக்கோட்டை ஒன்றியத்தில் கம்பளத்தார் வசிக்கும் 32-கிராமங்களில் பண்பாட்டுக் கழகத்தின் கிளைகளை அமைத்து, கொடியேற்றியுள்ளார். எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு சாதிக்கும் திறமையுள்ள திரு.செல்வராஜ் அவர்களின் சேவையை மாவட்ட அளவில் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு, பண்பாட்டுக் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். மாவீரனின் பிறந்தநாளை படுவிமர்சையாக கொண்டாடும் இவர், நிலக்கோட்டை ஒன்றியத்தின் சார்பில் மட்டும் 32 பிளக்ஸ் பேனர்களை வைத்து அம்மாவட்டத்தையே அமர்க்களப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலகாலம் விடுதலைக்களம் அமைப்பின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக பொறுப்பு வகித்தவர், விருதுநகரில் 2018-ஆம் ஆண்டு இறுதியில், விடுதலைக்களம் நடத்திய மாநாட்டிற்கு, காவல்துறையின் சிறப்பு அனுமதிபெற்று 13க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை தன் சொந்த செலவில் அழைத்துச் சென்றார். இதுதவிர,வருடம் தோறும் மாவீரன் பிறந்தநாளான ஜனவரி-3 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் விழாவிற்கு 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் இளைஞர்களை அழைத்துச்சென்று மாவீரனுக்கு புகழஞ்சலி செலுத்துவதை வாடிக்கையாக கடைபிடித்து வருகிறார்.
மறுமலர்ச்சி திமுகவில் கிளைக்கழக செயலாளராக தன் அரசியல் பயணத்தை துவக்கியவர், 2006 ஆம் ஆண்டில் நகர செயலாளராக நியமிக்கப்பட்டார். அக்கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்கள், மறியல்கள், நடைபயணங்களில் கலந்து கொண்டதுடன், அக்கட்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். 2016 முதல் அதிமுக வில் இணைந்தவர், அவரின் தீவிர செயல்பாட்டை நன்கு உணர்ந்திருந்த அதிமுக தலைமை, அதற்கு மதிப்பளிக்கும் வகையில், நிலக்கோட்டை ஒன்றிய அம்மா பேரவைச்செயலாளர் பதவி வழங்கி கௌரவித்தது. அரசியலில் தீவிரமாக அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றும் திரு.செல்வராஜ் அவர்கள், சாதாரண ஏழை-எளிய கிராமப்புற மக்களுக்கு சாதி-மத பேதமின்றி பசுமை வீடுகள் பெற்றுத்தருவதும், மாணவச் செல்வங்களுக்கு வருடம் தோறும் இலவச நோட்டுப் புத்தகம் வழங்கி ஊக்குவிப்பதும், தகுதிவாய்ந்த ஏழைகளுக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிணை பெற்றுத்தந்தும் அம்மக்களின் மனங்களில் நீங்க இடத்தைப் பெற்றுள்ளார்.
இவரின் சமூகப்பணியை அங்கீகரித்து கடந்த டிசம்பர்-2019 ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், நிலக்கோட்டை அருகே உள்ள நூத்தலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு.எம்.செல்வராஜ் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர் என்பது குறுப்பிடத்தக்கது. சமுதாயத்திலிருந்து பொதுவாழ்வில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு.எம்.செல்வராஜ் அவர்கள், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் சாதி,மத,இன,மொழி பேதமின்றி அனைவருக்கும் பாரபட்சமின்றி பணியாற்றி, மென்மேலும் பலசாதனைகளைப் படைத்து சமுதாயத்திற்கும், வாய்ப்பளித்த கட்சிக்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.